
இன்று வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் நின்ற பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
உங்கள் அடுத்தகட்ட கல்விப் பயணம் இன்னும் சிறக்கட்டும்!...
அதே சமயம்,எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராத அல்லது தற்காலிகமாகத் தேர்ச்சி பெறத் தவறிய மாணவச் செல்வங்களே...
இந்த ஒரு தேர்வு முடிவு உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையோ, உங்கள் தனித்திறமையையோ ஒருபோதும் தீர்மானிக்காது. உலகில் சாதித்த பல சாதனையாளர்கள் பள்ளிக்கூடத் தேர்வுகளில் வென்றவர்கள் அல்ல; வாழ்க்கைத் தேர்வுகளில் வென்றவர்கள்!
அன்பான பெற்றோர்களே!..
இந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகளுக்குத் தேவை உங்களின் ஒப்பிடுகளோ அல்லது கோபமோ அல்ல. "பரவாயில்லை மகனே/மகளே, நான் இருக்கிறேன்... உன்னால் முடியும்" என்ற உங்களது ஆறுதல் வார்த்தைதான். அவர்களுக்குப் பக்கபலமாக நில்லுங்கள்.
விதை கீழே விழுவது அழிவதற்கல்ல... மரமாக முளைப்பதற்கே!..தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், அடுத்த அடி எடுத்து வைப்போம். நாளை நமதே!
தமிழ்



































