VASUGI BHASKAR
1.6K posts















பெருகும் சாதிய வன்முறைகள்: சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து பகுதியில் 02.03.2026 அன்று ஒன்பது பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் சம்பவ இடத்திலேயே பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜான் மார்க் (41) என்பவரும், வட மாநிலத் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு சாதிகளிலிருந்து ஐந்து பேர் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 21 வயதிற்குட்பட்டவர்கள். நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவம் நம் நினைவுகளில் இருந்து மறைவதற்கு முன்பே சிவகங்கை இடைக்காட்டூரில் ராசு என்பவர் மீது வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மோசமான கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு கொடூரச் சம்பவம் பேசுபொருளாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்து நிகழும் சாதிய வன்முறைகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறையும், திமுக அரசும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்திருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாங்குநேரி பெருந்தெரு பகுதியில் சின்னத்துரை என்கிற பள்ளி மாணவனின் வீட்டிற்குள் புகுந்த சக மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்குற்றச் செயலில் தொடர்புடைய இரண்டு சிறார்கள் அதாவது, முதன்மைக் குற்றவாளிகள் தற்போதைய பெரும்பத்து சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2025 வரை மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே கொலை, கொலைவெறித் தாக்குதல் என 10 கொடூரச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இக்குற்றச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் பள்ளி - கல்லூரி மாணவ வயதில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாபாசாகேப் அம்பேத்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் சுவரோவியங்கள் மீது பெட்ரோல் குண்டு எறிந்த மூவரில் இருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 20 வயது. இச்சம்பவத்தின் பின்னணியிலும் சமூகவலைதள மோதலும், ரீல்ஸும் காரணமாக இருந்திருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்த கொடூரக் குற்றங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் சாதாரணர்கள். தாம் யாரால் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதைக் கூட சிந்திக்க முடியாமல் இளம் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பொருளாதார பின்புலமில்லாதவர்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், அடுத்த வன்முறைக்கான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அரசுக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன. 1. அரசியல் நலன்களுக்காக ஊக்குவிக்கப்படும் சாதிப் பெருமிதத்தை வீரமாக்கும் கலாச்சாரப் பிம்பங்கள், சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புணர்வு அரசியல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும். 2. சாதி ஆதரவு மனப்பான்மைக்கும் சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களுக்குமான வேறுபாட்டை விளக்குவதற்காக சமூகநீதி - வரலாறு - பாலினச் சமத்துவத்தைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். 3. மேடைப் பேச்சுகளிலும், கலை - இலக்கியம் - சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களிலும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் நிலைபெறச் செய்யப்படும் சாதியப் பெருமைகளால் உருவாகும் விளைவுகளை விமர்சனப்பூர்வமாக அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 4. இளைஞர்களிடம் பரவிவரும் சாதிய மனநிலையைக் கட்டுப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து விழிப்புணர்வு வகுப்புகள், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் மூலம் அவர்களுடனான தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்த வேண்டும். சாதி என்பது சமூக அரசியலுக்காகவும், தேர்தல் அரசியலுக்காகவும் எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்னரே பலியிடப்படும் அப்பாவி இளைஞர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் சமூகத்தின் பல தளங்களில் வேலை செய்கிறவர்களை ஒருங்கிணைத்து நீண்டகால நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கோருகிறது. @Neelam_Culture




















