
தமிழ்நாட்டில் இந்த தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்தவுடன் எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத முதல்வர் விஜய் உட்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பொறுப்பில் உள்ளனர். செங்கோட்டையன் போன்ற சில அனுபவமிக்க நபர்கள் மட்டுமே அவர்களுடன் இருக்கின்றனர்.
ஆகையால் இந்த புதிய ஆட்சிக்கு மக்கள் போதிய அவகாசம் வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
முதல்வரே தனியாக அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதல்ல. சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டமும், அரசு நிர்வாக அமைப்பும் எந்த ஆட்சி வந்தாலும் தொடர்ந்து செயல்படும்.
ஆனால் நடைமுறையில் பணக்காரனுக்கு தண்டனை தாமதமாகவும், ஏழைக்கு உடனடியாகவும் கிடைக்கிறது என்பதே மக்களின் வேதனை.
இன்று மக்கள் ஏன் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். திமுக – அதிமுக ஆட்சிகளின் மீது இருந்த அதிருப்தியிலிருந்து மக்கள் இப்போது தான் சற்றே மூச்சுவிடத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக பல முக்கிய பிரச்சினைகளுடன் போராடி வருகிறது:
• காவிரி நீர் பிரச்சினை
• முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை
• வேலைவாய்ப்பு இல்லாமை
• விவசாய சிக்கல்கள்
• மின்சார மற்றும் விலை உயர்வு பிரச்சினைகள்
• குடிநீர் தட்டுப்பாடு
• NEET மற்றும் கல்வி சிக்கல்கள்
• மொழி மற்றும் மாநில உரிமை பிரச்சினைகள்
• சாதி மற்றும் சமூக அநீதி
• மீனவர் வாழ்வாதார பிரச்சினைகள்
• ஊழல் மற்றும் அரசியல் பணப் பேரம்
• சுற்றுச்சூழல் பாதிப்புகள்
• சாலை, போக்குவரத்து மற்றும் சுகாதார குறைபாடுகள்
• TASMAC மற்றும் போதைப்பொருள் பாதிப்புகள்
இந்த பிரச்சினைகள் இன்று உருவானவை அல்ல. பல தசாப்தங்களாக மக்கள் போராடி வரும் வாழ்வுரிமை பிரச்சினைகள்.
இந்த மண்ணின் உரிமைக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த எண்ணற்ற தமிழ்த்தேசிய போராளிகள் — அண்ணன் தி.வேல்முருகன் உள்ளிட்ட பலர், மேலும் கம்யூனிச சித்தாந்தத்தை தாங்கி நிற்கும் எத்தனையோ போராளிகள் — தெருக்கு தெரு “ஜோக்கர்” திரைப்படக் கதாநாயகனைப் போல மக்களுக்காக பைத்தியமாய் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரியணையில் அமர வேண்டியவர்கள் இவர்கள்தான்.
ஆனால் இத்தனை ஆண்டுகள் போராடிய ஆயிரக்கணக்கான போராளிகள் தேர்தலில் நின்றபோது, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஓட்டுகள் மட்டுமே அளித்து மக்கள் அவர்களை புறக்கணித்த வரலாறையும் இன்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.
கேரளாவைப் போல இந்த மண்ணுக்காக போராடியவர்களை மக்கள் அடையாளம் கண்டு வாக்களித்திருக்க வேண்டும்.
இந்த ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தது பெரும்பாலும் விஜய் என்ற ஒற்றை நபரின் மீது வைத்த நம்பிக்கையால்தான். மீதமுள்ள பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முன் நிர்வாக அனுபவம் இல்லை.
ஆகையால் மக்கள் முன்னால் முதல்வர் சொல்வதைப் போல குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.
மாற்றம் ஒரே நாளில் வராது. மக்கள், அரசு, போராளிகள் — மூவரும் ஒன்றாக செயல்பட்டால்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் வலுப்படும்.

தமிழ்
















