
குவைத் கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரான் நேரடித் தாக்குதல் - துபாய் துறைமுகத்தில் பதற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் துறைமுக நங்கூரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவைத்தின் "அல்-சல்மி" (Al-Salmi) கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது, மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:10 மணியளவில் ஈரான் படைகள் நேரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (KPC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான சமயத்தில் கச்சா எண்ணெய் முழுமையாக நிரப்பப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்ட கப்பலின் அடிப்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், கப்பலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாகும் அபாயம் நிலவுவதால், அவசரக்கால மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேதங்கள் குறித்த விரிவான தொழில்நுட்ப ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலில், குவைத் கப்பல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ்
















