Vi retweetledi

கேரள பந்த் – மறக்க முடியாத பயணம்
என்னால் மறக்க முடியாத பயணம் என்ன என்று கேட்டால், என்னுடைய சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திற்கு தட்டுத் தடுமாறி போனதைத் தான் சொல்வேன்
தாமிரபரணி புஷ்கரம், 100 வருஷத்திற்கு ஒரு முறை வருவது – இந்த நேரத்தில் தாமிரபரணியில் குளிக்காவிட்டால் ஜென்ம சாபல்யம் கிடையாதுன்னு சொன்னதால், ஊருக்குப் போவதாக முடிவெடுத்தேன் – போலைன்னா ஊரை விட்டு தள்ளி வைக்கக் கூட சான்ஸ்
மங்களூர் to கொல்லம் டிக்கெட் எடுத்தாச்சு – 2nd A/c. நம்ம நேரம் சைடு அப்பர் அலாட்டட் – அப்பவே அலெர்ட் ஆகியிருக்கணும் – விதி – சாயந்திரம் 7 மணிக்குப் புறப்பட்டு, கொல்லம் காலை 6 மணிக்குப் போய்விட்டால், அங்கிருந்து பஸ்ஸில் தென்காசி – பின் அம்பாசமுத்திரம் – பிளான் பிரமாதமாக இருந்தது – ஆனால் நடந்தது வேறு
காலை 6 மணிக்கு கொல்லம் ஸ்டேஷன் வந்தது – ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தால், ஊரே படு அமைதியில்
சபரிமலைக்காக, திடீர் பந்த் – முந்தின நாள் தான் அறிவித்திருக்கிறார்கள் – என்ன செய்வது என்று தெரியாது, ஆனது ஆகட்டும் என்று நடை தூரத்தில் இருந்த கொல்லம் பஸ் ஸ்டாண்டிற்கு நடந்தேன் – ஒரே ஒரு Shoulder Bag – பெரிய லக்கேஜ் ஏதும் இல்லை
பஸ் ஸ்டாண்டில் 7 பேர் நின்று கொண்டிருந்தனர் – ஒரு பஸ்ஸில் தென்காசி என்ற போர்டை வைத்தனர் – ஆஹா கடவுள் நம் பக்கம் என்றெண்ணி, ஏறி உட்கார்ந்தேன் – கூட 4 பேர்
5வது நிமிடம் எங்கிருந்தோ கூட்டமாக ஒரு குரூப் வந்தது – சரமாரியாக செங்கற்களை பஸ் மீது எறிந்தார்கள் – கண்ணாடி எல்லாமே காலி – நாங்கள் இறங்கிவிட்டோம் – ஒரு போலீஸ்காரர் வந்தார் – ‘’பஸ் போகாது’’ என்று மட்டும் அறிவித்துவிட்டு காணாமல் போனார்
என்ன செய்வது என்று தெரியாது 1 நிமிடம் பெஞ்சில் உட்கார்ந்தேன் – ஊருக்கே திரும்பப் போய்விடலாம் என்று முடிவெடுத்து, திரும்ப ஸ்டேஷனுக்கு நடை
ஸ்டேஷனுக்குப் போனால் ஏகக் கூட்டம் – குழந்தை குட்டிகளுடன் வந்தவர்கள் நிலை படு பரிதாபம்
திடீரென்று ஸ்டேஷன் வாசலில் திருவனந்தபுரம் என்ற போர்டுடன் ஒரு பஸ் வந்து நின்றது – பஸ்ஸில் எஸ்கார்ட்டுக்கு இரண்டு போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன்
கண்டக்டர் ‘’திருவனந்தபுரம், திருவனந்தபுரம்’’ என்ற கத்தி ஆட்களைச் சேர்க்க, ஆனது ஆகட்டும் என்று ஏறினேன் (அப்படி ஊருக்குப் போவது படு சுத்து) – மொத்தம் 13 பேர் – ஷட்டர்கள் இறக்கப்பட்டன
பஸ் திருவனந்தபுரத்தை நோக்கி – வழி நெடுகிலும் போராட்டக்காரர்கள் கையில் தடிகளுடன் – மிகுந்த சிரமத்திற்கு இடையில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது – பஸ் ஸ்டாண்டிற்கு கேட் உண்டு என்பது அன்று தான் தெரியும் – கேட்டைத் திறந்தார்கள் – பஸ் உள்ளே போனவுடன் மூடினார்கள் – பஸ் நின்றது – என்னுடன் வந்தவர்கள் இறங்கினார்கள் – அடுத்த நிமிடம் எங்கு போனார்கள் என்று பார்ப்பதற்குள் மாயமானார்கள் – பஸ் ஸ்டாண்டில் நான் மட்டுமே – வெளியில் வந்தேன் – மணி 9.30 – காஃபி கிடைக்கவில்லை – தண்ணீர் பாட்டிலில் இருந்து 2 மடக்கு விழுங்கினேன்
பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே படு அமைதி – ஒரே ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது – அதன் அருகில் ஒரு நபரும் நின்றிருந்தார்
அவரிடம் போய் ‘’தமிழ்நாடு பார்டர் களியக்காவிளை வரை வர முடியுமா’’ என்றேன் – ஒரு பெரிய NO
இரண்டு நிமிடம் கழித்து அவரே அருகில் வந்தார் – Honda Activaவில் கொண்டு போய் விடுகிறேன் – ஆனால் ரூ.1000 வேண்டும் என்றார் (40 கிமீ) – பேரம் பேசி ரூ.800க்கு முடிவானது
வண்டியை எடுத்துக் கொண்டு வந்தார் – பின்னால் உட்கார்ந்தேன் – போகும் வழியில் போராட்டக்காரர்களைப் பார்த்தால், வண்டியை நிறுத்தினோம் – நின்றோம் – அதையும் மீறி ஒரு குரூப் ‘’ஏன் ரோட்ல அலையறீங்கன்னு’’ எங்களைத் திட்டிச் சென்றது – சரியான வெய்யில் – வதங்கி விட்டேன் – போகும் வழயில் கோவில்களில் யேஸூதாஸும் மாதுரியும் ஈனஸ்வரத்தில் பாடுவது கேட்டது
அது சரஸ்வதி பூஜை டயம் – தமிழ்நாடு பார்டர் வரப் போகிறது என்பது ஆட்டோக்காரர்கள் அமைத்திருந்த பந்தல்கள், ஆடியோ ஸிஸ்டத்தில் இருந்து தெரிந்தது
ஆயுத பூஜையை முன்னிட்டு, 15 அடிக்கு ஒரு பந்தல் இருந்தது – ஒண்ணில் ‘’ஷக்கலக்க பேபி’’ பாட்டென்றால் இன்னொன்றில் ‘’திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’’ என்று பக்திப் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன – களியக்காவிளையில் இறக்கி விட்டார் – அப்பாடா என்றிருந்தது – ரோட்டோரம் ஒரு டீ-யைக் குடித்தேன்
நாகர்கோவில் என்று போட்டிருந்த பஸ்ஸில் ஏறினேன் – டிக்கட் ரு.40 – ஆனால் நூறு ரூபாய்க்கு ஓட்டினார் – தெருக்களில் எல்லாம் பஸ் போனது – பொறுமை போய் கொண்டிருந்தது – எப்படா நாகர்கோவில்ல இறக்குவ
ஒரு வழியாக நாகர்கோவில் – பஸ் ஸ்டாண்டில் நான் போக வேண்டிய பாபநாசம் ரூட் பஸ்ஸைத் தவிர மற்ற எல்லாம் வந்து கொண்டிருந்தன
பொறுமை முழுவதுமாகப் போனது – ஓலா-உபேர் இருக்கிறதா என்று பார்த்தேன் – டெக்னாலஜி கைகொடுக்கவில்லை – ஃபாஸ்ட் டிராக் டாக்ஸி இருந்தது – அம்பைக்கு புக் பண்ணினேன் – ரூ.1600
2வது நிமிடத்தில் கார் வந்தது – ஒரு 70 வயது மதிக்கத் தக்க நபர் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார் – மணி 12 – எத்தனை மணிக்கு அம்பை போக முடியும் என்று கேட்டேன் – 1.50க்கு உங்க வீட்ல இருப்பீங்க என்றார்
வீட்டுக்கு ஃபோனைப் போட்டேன் – 3 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துருவேன் – சாப்பாடு வேணும்னு சொன்னேன் – டிரைவர் 3 மணி என்று சொன்னதற்கு என்னை முறைத்தார் – அவருக்கு அந்த ரூட் அத்துப்படி என்பது, எங்கு ஸ்பீடைக் குறைக்கணும், எங்கு பறக்கலாம் என்று அவர் ஓட்டியதில் இருந்து தெரிந்தது
வீட்டுக்கு 1.47க்கு கொண்டு வந்து விட்டார் – எப்படிச் சொன்னீங்க டயத்தைன்னு கேட்கும் போது, நான் ரெகுலரா அம்பை வர ஆள் அப்படின்னார்
படு பிரச்சனைகளுக்கு இடையே ஆரம்பத்த பயணம் இறுதியில் Fast Track Taxi உதவியுடன் பிரச்சனையில்லாது தீர்ந்தது
அன்று மாலையே ஆற்றிற்குப் போய் ஒரு குளியலைப் போட்டேன்
தாமிரபரணி புஷ்கரம் – எப்படிடா இதையெல்லாம் கண்டுபிடிக்கறீங்க
தமிழ்





























